கொரோனா வைரஸ் தொடர்பாக சென்னை முழுவதும் 90 நாட்களுக்கு வீடுவீடாக இன்று முதல் ஆய்வு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு - Kalviseithi

கொரோனா வைரஸ் தொடர்பாக சென்னை முழுவதும் 90 நாட்களுக்கு வீடுவீடாக இன்று முதல் ஆய்வு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொடர்பாக சென்னை முழுவதும் 90 நாட்களுக்கு வீடுவீடாக இன்று முதல் ஆய்வு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு



சென்னை: கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக இன்று முதல் 90 நாட்களுக்கு சுகாதாரத்துறையினர் வீடுவீடாக சென்று யாருக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்கிறது என்பதை ஆய்வு செய்வார்கள் என்று உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். சென்னையில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு குறித்த கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது. இதில் மிக முக்கிய பணியான, மாநகரம் முழுமையிலும், அனைத்து வீடுகளிலும் தினந்தோறும் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை சென்னை மாநகராட்சி அம்மக்களை ஆய்வு செய்து, அது சாதாரண சளி மற்றும் காய்ச்சலாக இருப்பின் அதற்கான மருத்துவம் மாநகராட்சியின் மூலம் அளிக்கவும், மேல் சிகிச்சை தேவைப்படின், பொது சுகாதார துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு பொது மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க சென்னை மாநகராட்சியால் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, மாநகரம் முழுவதும் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இப்பணிக்கு சென்னை மாநகராட்சியின் மொத்த பரப்பளவில் உள்ள சுமார் 10 லட்சம் கட்டிடங்களில், 75-100 கட்டிடங்கள் என்ற வகையில் பகுதிகளாக. பிரிக்கப்பட்டு, மொத்தம் சுமார் 13,100 கூறுகள் உருவாக்கப்படும். இவ்வனைத்து பணிகளையும் நேரடியாக கண்காணிப்பு செய்ய சென்னை மாநகராட்சியின் 16,000 ஊழியர்கள் களத்தில் பணியாற்ற உள்ளனர். இந்த ஊழியர்கள், 75-100 வீடுகளை இன்று முதல் தினந்தோறும் தொடர்ந்து 90 நாட்களுக்கு இடைவிடாது தொடர் ஆய்வு செய்து, தினமும் அதற்குண்டான பதிவுகளை உரிய முறையில் மேற்கொள்வார்கள். இதன் மூலம், பொது மக்களின் ஆரோக்கியம் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஒரு அமைப்பினை சென்னை மாநகராட்சி உருவாக்கி உள்ளது. இந்த களப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, உரிய பயிற்சி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு மாதந்தோறும் 15,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும். இவ்வாறான பணிகளுக்கு, உரிய பாதுகாப்புகளும், வருகை புரியும் சென்னை மாநகராட்சியின் களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot